siruppiddy

வெள்ளி, செப்டம்பர் 28, 2018

யாழ் நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளும் சிறப்புக்களும்!

முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகன் தமிழர்களின் தனிப் பெரும் கடவுள். முருக வழிபாடு தமிழ் மக்களிடையே தொன்று தொட்டு வழங்கி வரும் ஒரு வழிபாடாகும்.முருகு என்பதற்கு 
இளமை, இனிமை, அழகு எனப் பல்வேறு பொருள்கள் உண்டு. சரவணப் பொய்கையில் பிறந்தவன் ஆகையால் சரவணபவன் எனவும், கார்த்திகைப் பெண்கள் வளர்த்த காரணத்தால் கார்த்தித்திகேயன் எனவும், இளமையே வடிவான காரணத்தால் முருகனைக் குமரக் கடவுள் எனவும், தந்தைக்கே 
பிரணவப் பொருளை
உணர்த்தியவன் ஆகையால் சுவாமி நாதன் எனவும், யாவருக்கும் நன்மையே செய்பவன் என்ற காரணத்தால் சுப்பிரமணியன் எனவும், குன்றங்களெல்லாம் குடிகொண்ட காரணத்தால் குறிஞ்சிக் கடவுள் எனவும், கலியுகத்திலும் வேண்டுவார் வேண்டும் வரம் அருள்பவன் ஆகையால் கலியுக வரதன் எனவும் போற்றுகின்றோம்.
தென்னிந்தியாவில் ஆறுபடை வீடுகளில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகன் முருகப் பெருமானுக்கு திருமூலரால் சிவபூமி என போற்றிப் புகழப்பட்ட இலங்கைத் திருநாட்டிலும் பல திருக்
 கோயில்கள் உண்டு.
யாழ்ப்பாணத்தில் நல்லூர்க் கந்தசுவாமி, தொண்டமானாறு செலவச் சந்நிதி முருகன் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் ஆகிய ஆலயங்கள் முருகப் பெருமானுக்குக்குரிய பிரசித்தி பெற்ற 
திருத்தலங்களாகவுள்ளன.
அத்துடன் கதிர்காமக் கந்தன் ஆலயம், மண்டூர் முருகன் ஆலயம், வெருகல் சித்திர வேலாயுதர் ஆலயம் எனப் பல பழம் பெரும் முருகன் ஆலயங்கள் இலங்கையில் காணப்படுவது எமது நாட்டில் முருகப் பெருமானின் வழிபாடு தொன்மையான காலம் தொட்டு வழங்கி வருகிறது என்பதற்குத் தக்க சான்று பகரும் வகையிலுள்ளது.
ஈழத்திலே நல்லூர் என்ற பெயரிலே ஐந்து கிராமங்கள் உள்ளன. அவற்றிலே யாழ்.நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள நல்லூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம். 12 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராகவும்,
இலங்கையின் வடபகுதியிலுள்ள தமிழர்களின் இராசதானியாகவும் விளங்கியது நல்லூர்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு “குருக்கள் வளவு” என்ற காணியில் 884 ஆம் ஆண்டளவில் கட்டியதாக கைலாய மாலை 
எனும் நூல் கூறுகிறது.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைப் புவனேகபாகு தான் கட்டினான் என்பதற்கு ஆதாரமாக கைலாயமாலையில் வெளிவந்த பின்வரும் செய்யுளைக் குறிப்பிடலாம். இலகிய சகாத்த மெண்ணுற் றெழுபதா மாண்ட தெல்லை அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு 
நலமிகும் யாழ்ப்பாணத்து நகரிகட்டுவித்து நல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே “ஆதியில் ஆலயத்தை நிர்மாணித்த ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு தற்போதும் மஹோற்சவ காலங்களில் கட்டியம் கூறும் போது
 ஆசிர்வதிக்கப்படுகின்றார்.
பதினாறாம் நூற்றாண்டின் நடுப் பகுதியான 1560 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1200 பேரைக் கொண்ட போர்த்துக்கீசக் கப்பற்படையினர் யாழ்ப்பாணக் களப்பில் வந்திறங்கினர்.
குறித்த கப்பற் படையினர் கரையில் நின்ற தமிழ்ப் படையுடன் போரிட்டு வென்று யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரான நல்லூர் இ
ராசதானியைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டு வந்த சங்கிலிய அரசன் அங்கிருந்து ஒழிந்தோடியதாகவும், பின்னர் போர்த்துக் கீசப் படையினர் சங்கிலிய அரசனுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதாகவும் வரலாறு.சங்கிலிய அரசன் போர்த்துக் கீசரைப் பொருட்படுத்தாது செயற்படுவதை அறிந்த அந்திர பூர்த்தாடு தே மென்டோன்சா எனும் பெயர் கொண்ட தளபதி 1591 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்தில் பெரிய கப்பற் படை சகிதம் வந்திறங்கினர்.
யாழ்ப்பாணத்து அரசருடைய படை வீரர்கள் எதிர்த்துப் போராடிய போதும் பலனில்லாத சூழலில் குறித்த படைஇலங்கை வந்தடைந்த இரண்டு நாட்களிலேயே நல்லூரை முற்றுகையிட்டது.
இந்த முற்றுக்கைக்கெதிராக யாழ்ப்பாணத்து அரசனின் படை வீரர்கள் மட்டுமன்றி கோயிற் பூசகர்கள், வத்தமிழர்கள் ஆகியோரும் வெகுண்டெழுந்து போரிட்டனர்.இந்தப் போரிலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தையும், ஏனைய சைவ ஆலயங்களையும் பாதுகாப்பதற்காகப் பலரும் தங்கள் உன்னதமான உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டி
யேற்பட்டது.
இதன் பின்னர் கொழும்பிலிருந்து போர்த்துக்கீசத் தேசாதிபதியின் கட்டளையின் பேரில் பிலிப்தெ ஒலிவேறா எனும் தளபதி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதுடன், அரசனையும் சிறைப்பிடித்தான்.1621 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்-02 ஆம் திகதி நல்லூரை ஆக்கிரமித்து 
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்குமாறு தனது படை வீரர்களுக்குப் பணித்ததன் பேரில் ஆலயம் முற்றுமுழுதாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
போர்த்துக்கீசத் தளபதியின் மிலேச்சத்தனமான செயல் கண்டு நல்லூர் ஆலயத்தைச் சூழவிருந்தவர்கள் பெரும் துயரடைந்தனர். கோயிலை அழியவிடாமல் தடுக்க கேட்பவற்றையெல்லாம் தருவதாகக் கெஞ்சினர். மன்றாடினர். ஆனாலும், போர்த்துக் கீசத் தளபதி இவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை
போர்த்துக் கீசர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைத் தரமட்டமாக்கிய போதும் சைவப் பெருமக்களின் உள்ளத்திலிருந்து அவர்களால் நல்லூர்க் கந்தன் வழிபாட்டையும், எல்லாம் வல்ல முருகப் பெருமானின் நாமத்தையும் அழிக்க முடியவில்லை.1658 ஆம் ஆண்டு யூன் மாதம் போர்த்துக் கீசர் வசமிருந்த யாழ்ப்பாண மாவட்டம் ஒல்லாந்தர் வசமானது. ஒல்லாந்தர் தமது கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதிலும், தேவாலயங்களை நிறுவுவதிலும் ஆர்வம் காட்டினர்.இதன் ஒரு கட்டமாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் முன்னரிருந்த இடமாகிய யமுனாரிக்கு அருகில் தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டது.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் சமய வழிபாட்டுச் சுதந்திரம் காணப்படாமையால் ஆலயத்தைப் பெரிதாக நிர்மாணிக்காமல் 1734 ஆம் ஆண்டில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் ஏற்கனவே இருந்த இடமாகிய யமுனாரிக்கு அருகில் சிறியதொரு மடாலயம் அமைத்துப் பக்தர்கள் வேலை வைத்து அமைதியான முறையில் 
வழிபாடாற்றி வந்தார்கள்.
போர்த்துக்கீசரால் இடிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை இரகுநாத மாப்பாண முதலியார் 1734 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கற்களினாலும், செங்கற்களினாலும் மீளவும் அமைத்தார். இது தொடர்பில் “யாழ்ப்பாண வைபவ மாலை” நூலிலும் 
கூறப்பட்டுள்ளது.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறப்பாராகக் கடமையாற்றி வந்த தொன் ஜீவான் மாப்பாண முதலியார் தனது பதவிச் செல்வாக்கைப் பயன்படுத்தி மீளவும் ஆலயத்தை நிர்மாணிப்பதற்கான உத்தரவைப் பெற்றுக் கொண்டதாகவும் அறியக் கிடைக்கிறது.
ஆலயத்தின் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் வானளாவிய ரீதியில் உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் ஆலய வளர்ச்சிக்கான அடையாளங்களாகவுள்ளன. ஆலயத்தின் வடக்குப் பக்கமாக இலங்கையிலேயே மிகவும் உயரமான குபேர 
வாசல் நவதள இராஜ கோபுரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கடந்த வருடம் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழாவின் 18 ஆம் நாளாகிய கார்த்திகைத் திருவிழாவன்று கும்பாபிஷேகப் பெருஞ் சாந்தி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சம்.
இந்த ஆலயத்தினை இரகுநாத மாப்பாண முதலியாரின் வம்சத்தினர் பரம்பரை பரம்பரையாகச் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். ஆலயத்தில் பூசைகள் காலநேர ஒழுங்கு தவறாது நிகழ்வதற்கு அல்லும் பகலும் அயராது தொண்டாற்றியவர் சங்கரப்பிள்ளை இரகுநாத 
மாப்பாண முதலியார். திருவிழா உபயகாரர்களின் வருகையையோ,நாட்டின் தலைவர்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் ஆகியோரின் வருகையையோ எதிர்பார்த்து ஆலயத்தின் வழமையான பூசைகள் மற்றும் விசேட உற்சவங்களை பின்படும் வழக்கம் இந்தக் கோயிலில்
 அறவே கிடையாது.
ஒரு ரூபாவுக்கு அர்ச்சனை இடம்பெறும் ஆலயம் இந்த ஆலயமாகும். இது ஈழத்து ஆலயங்களில் வேறெங்கும் காண முடியாத தனிச் சிறப்பெனலாம்.ஈழத்தின் தலை சிறந்த சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும், அவரது சீடரான யோகர் சுவாமிகளும் தடம் பதித்த புண்ணிய திருக் கோயிலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும், 
திருவீதியும் திகழ்கிறது.
இவ்வாலயத்தின் மூலஸ்தானத்திலே முருகப் பெருமானின் திருவுருவம் வைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக முருகப் பெருமானின் ஞான சக்தியாகிய வேலே பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தைச் சூழ இலங்கையிலேயே ஒரேயொரு சைவ ஆதீனமாகத் திகழும் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் ஆறுமுக நாவலர் மணி மண்டபம், நல்லூர் அறுபத்து மூன்று நாயன்மார் 
குருபூசை மடம், நல்லூர்
துர்க்கா மணி மண்டபம், நல்லூர் நடராஜர் பரமேஸ்வரன் மணி மண்டபம் ஆகிய பல மடங்களும், மண்டபங்களும் காணப்படுகின்றன. ஆலய மஹோற்சவப் பெருநாட்களில் மேற்படி மண்டபங்களில் ஆன்மீகக் கலை, கலாசார நிகழ்வுகளுடன், சில மண்டபங்களில் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நன்மை கருதி அன்னதானமும் 
வழங்கப்படுகிறது.
நாள் தோறும் இங்கு ஆறுகாலப் பூசைகள் இடம்பெறுகின்றன. வாரத்தில் வெள்ளிகிழமைகளிலும், விசேட நாட்களிலும் கந்தன் திருவடியைத் தரிசிக்க வரும் அடியவர்கள் பலர்.நல்லூர்க் கந்தன் 
மஹோற்சவம் ஆவணி மாத அமாவாசையைத் 
தீர்த்தோற்சவமாகக் கொண்டு 25 
தினங்கள் மஹோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெறுகின்றன. ஈழத்திலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலுமே 25 தினங்களாக மஹோற்சவப் பெருவிழாக்கள் வருடம் தோறும் நடைபெற்று வருகின்றன. மஹோற்சவ நாட்களில் மொத்தமாக 55 திருவிழாக்கள் 
நடைபெறுகின்றன.
இவற்றுள் கொடியேற்றம்,திருமஞ்சத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, கைலாசவாகனத் திருவிழா, சப்பறம், தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன முக்கியமானவை.
காலைத் திருவிழாவுக்கு 150 ரூபாவும், மாலைத் திருவிழாவுக்கு 235 ரூபா 50 சத்தமும் மாத்திரம் பெற்றுக் கொள்ளும் தனித்துவம் வாய்ந்த ஆலயமும் இதுவாகும்.
ஆலய உற்சவ காலங்களில் பெருந் தொகையான அடியவர்கள் உள்நாட்டிலிருந்து மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்து கலந்து கொள்ளுவர். ஆலயத் தேர், தீர்த்த
 உற்சவ நாட்களில் இலட்சோப இலட்சம் அடியவர்கள் ஆலய வீதிகளில் ஒன்று கூடி முருகப் பெருமானைப் பக்திப் பரவசத்துடன் வழிபாடாற்றுதலும், நூற்றுக் கணக்கான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்ஷணம் செய்தும், காவடிகள் எடுத்தும் மெய்யுருக வழிபடும் காட்சிகள் 
மெய்சிலிர்க்க வைப்பன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

தங்க ரதமேறி நல்லூர் கந்தன் அடியவர்களுக்கு அருள் பாலித்தார் 08.09. 18

வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 08.09.2018 (புதன்கிழமை) இடம்பெற்ற இத்திருவிழாவில் முருகப்பெருமானின் தங்கரத உற்சவம் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். இன்றைய தினம் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வேல்
விமானத்தில் வீதியுலா வீதியுலா வந்தார்மாலை 5
 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, வேல்பெருமான் வள்ளி – தெய்வானை சமேதரராய் உள்வீதியுலா வந்து மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
எம்பெருமான் தங்கரதமேறி ஜொலித்த அருட்காட்சியை காண பக்தர்கள் அலையென திரண்டு வந்திருந்தனர். கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தினமும் விசேட பூஜை வழிபாடுகள்
 இடம்பெற்று வருகின்றன.
தினமும் காலையும் மாலையும் இடம்பெறும் திருவிழா நிகழ்வுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பல லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருவது 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>