siruppiddy

திங்கள், ஜனவரி 14, 2019

பொங்கும் மங்களம் எங்கும் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துகள்

ஜனவரி 15 : சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை எனும் வள்ளுவப் பேராசானின் குறள் மொழிக்கேற்ப, உலகில் வாழும் மக்கள் எண்ணற்ற தொழில்கள் பல செய்து வந்த போதும், உழவுத் தொழில் தான் முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும்
 போற்றப்படுகிறது.
இத்தகைய பெருமைக்கும், புகழுக்கும் உரிய உழவர் பெருமக்களின் நலனை பேணிக் காத்திடவும், உழவர்களின் பெருவாழ்வு மனமகிழ்ச்சியையும், அவர்தம் வாழ்க்கை சிறந்திடவும் பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  உலகத் தமிழர்கள் அனைவரும் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும், உவகையுடனும் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.
ஜாதி, வேறுபாடுகளைக் களைந்து சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்து நின்று பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில், புதுநெல்லு, புதுப்பானை, கரும்பு, மஞ்சள், வாழை என விளைந்த பொருட்களை வைத்து “பொங்கலோ பொங்கல்’’ என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனையும், இயற்கையையும் வணங்கி கொண்டாடும் திருநாள் பொங்கல் பண்டிகை என்னும் நன்நாள் ஆகும்.
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இவ்விழா சமயங்கள் கடந்து அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
இந்நாளில் மக்கள் வீடுமுழுக்க மாக்கோலங்களும், வாசலில் வண்ணப்பொடிகளால் கண்களைக் கவரும் வண்ணக் கோலங்களும் இட்டு சூரியனை வரவேற்கிறார்கள். பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திட வாசலில் மாவிலை, ஆவாரம்பூ, வேப்பிலை, கூரைப்பூ என்னும் கண்ணுப்பிள்ளை போன்றவற்றை காப்பாக முடிந்து நிலைப்படியில் கட்டுகிறார்கள். வாசலின் இருபுறமும் தித்திக்கும் கரும்பையும் கட்டி வைப்பர். பொங்கல்பானையில் மங்களத்தை குறிக்கும் வகையில் மஞ்சள் கிழங்கினையும், இலையும் சுற்றுவர்.
செங்கதிரோன் கீழ்வானில் வரும் இளம் காலைப் பொழுதில் நீராடி, புத்தாடை உடுத்தி வாசலில் பொங்கலிடுவதும், சின்னஞ்சிறு குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்து பொங்கல் பொங்கும் போது “”பொங்கலோ பொங்கல்” என்று ஆர்ப்பரிப்பதும் பொங்கலுக்கே உரியவையாகும். சுமங்கலிகள் குலவையிட்டு தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். சிலர் பொங்கல் பொங்கும் போது மங்களச் சின்னமான சங்கினை முழங்குவார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் இப்பழக்கம் காணப்படுகிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும்’  என்பதுபோல் இதுவரை நாம் அனுபவித்து வந்த துன்பங்கள் அனைத்தும் மறைந்து நம் வாழ்வில் இன்பங்கள் பெருக வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம். பொங்கல் பொங்கட்டும் தமிழர்களின் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி தங்கட்டும். அனைவருக்கும் தி மலேசியன் டைம்ஸ்-சின் இனிய பொங்கல்
 நல்வாழ்த்துகள்..

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம செய்தி >>>